கள்ளக்குறிச்சி
குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்துபொதுமக்கள் சாலை மறியல்தியாகதுருகம் அருகே பரபரப்பு
|தியாகதுருகம் அருகே குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தியாகதுருகம்,
தியாகதுருகம் பேரூராட்சி பகுதிகளில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் வாகனங்களில் ஏற்றி உதயமாம்பட்டு சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி வந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 6 மாதங்களாக புக்குளம் சாலையில் உள்ள வளம் மீட்பு பூங்கா அருகே குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இதற்கு புக்குளம் பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேரூராட்சி பணியாளர்கள் நேற்று தியாகதுருகம் பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை கொட்டுவதற்காக மினிலாரியில் உதயமாம்பட்டு சாலையில் உள்ள குப்பை கிடங்குக்கு சென்றனர். இதைபார்த்த அருகில் உள்ள வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பை கிடங்கிற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலையில் இருசக்கர வாகனங்களை குறுகே நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும் கூறினர். அதற்கு போலீசார், இதுபற்றி பேரூராட்சி அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனை ஏற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.