< Back
மாநில செய்திகள்
கடலூரில்,   பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் இயக்குவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்; லாரிகள் சிறைபிடிப்பு
கடலூர்
மாநில செய்திகள்

கடலூரில், பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் இயக்குவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்; லாரிகள் சிறைபிடிப்பு

தினத்தந்தி
|
14 Sept 2022 10:01 PM IST

கடலூரில், பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். அந்த வழியாக சென்ற லாரிகளையும் சிறை பிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


சாலை மறியல்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டை பகுதியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் சென்று படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலை வழியாக காலை, மாலை நேரங்களில் கனரக அதிக அளவில் செல்கிறது. குறிப்பாக லாரிகள், டிப்பர் லாரிகள் சரக்கு ஏற்றி செல்கிறது. அவ்வாறு செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்பட்டு வருகிறது.

அதேபோல் நேற்றும் டிப்பர் லாரி ஒன்று அந்த வழியாக சென்ற மாணவன் மீது மோதுவது போல் சென்றது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், மாநகராட்சி பா.ம.க. கவுன்சிலர் சரவணன் தலைமையில் கம்மியம்பேட்டை சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அப்போது அந்த வழியாக சரக்கு ஏற்றி வந்த டிப்பர் லாரிகளை சிறை பிடித்து கோஷங்களை எழுப்பினர். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதற்கு, இந்த வழியாக காலை, மாலை நேரங்களில் கனரக வாகனங்களை இயக்கக்கூடாது என்று பல முறை தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். அதற்கு போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை கேட்டதும் பொதுமக்கள் மறியலை கைவிட்டு, லாரிகளையும் விடுவித்து கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்