திருப்பத்தூர்
மழை நீருடன் கழிவுநீர் கலந்து வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
|மழை நீருடன் கழிவுநீர் கலந்து வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில் நேற்று பிற்பகல் சுமார் 3 மணி அளவில் திருப்பத்தூர் நகர பகுதியில் திடீரென கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழை நீர் வெள்ளம் போல் பாய்ந்து ஓடியது.
திருப்பத்தூர் டவுன் டி.எம்.சி. காலனி பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு மழைநீருடன் கலந்த கழிவு நீர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை திருப்பத்தூர்-சேலம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருப்பத்தூர் டவுன் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், இவ்வழியாக செல்லும் கழிவு நீர் கால்வாய் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
அதனை நகராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு போலீசார் நகராட்சி நிர்வாகத்திடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்ததின் பேரில், சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.