< Back
மாநில செய்திகள்
மத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

மத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

தினத்தந்தி
|
26 Oct 2023 1:15 AM IST

மத்தூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மத்தூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள குட்டூர் ஊராட்சி எம்.ஜி.ஆர். நகர் சேக்கினாம்பட்டியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இதுகுறித்து பொதுமக்கள் அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வசதி கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்