தேனி
பொதுமக்கள் சாலை மறியல்
|பெரியகுளம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரியகுளத்தில் கடந்த 19-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது மோதலை தூண்டும் வகையில் கட்சியின் நிர்வாகி ஒருவர் பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்-தேனி நெடுஞ்சாலையில் பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டியில் இந்த போராட்டம் நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திண்டுக்கல்-தேனி நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.