ஈரோடு
சென்னிமலை அருகே சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
|சென்னிமலை அருகே சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னிமலை
சென்னிமலை அருகே சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் வினியோகம்
சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது பாலத்தொழுவு ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள ஓலப்பாளையம், ராசாப்பாளையம், வெங்கமேடு, சாம்பமேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு கொடுமுடி-முத்தூர்-காங்கேயம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தினமும் 1 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் காவிரி குடிநீர் குழாய்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் பல மாதங்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அருகில் உள்ள கிணறுகளுக்கு சென்று குடிநீர் கொண்டு வந்தனர். மேலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.
சாலை மறியல்
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் கேட்ட போது, உடைந்த குடிநீர் குழாய்கள் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி அளித்திருந்தனர். ஆனால் 15 நாட்களுக்கு மேல் ஆகியும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இதையடுத்து நேற்று காலை 7 மணி அளவில் பாலத்தொழுவு ஊராட்சி பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் சென்னிமலை-ஊத்துக்குளி ரோட்டில் ஆலமரம் என்ற இடத்தில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் பெருந்துறை தாசில்தார் குமரேசன் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்களும் சென்று சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் அதிகாரிகளிடம் கூறுகையில், பாலத்தொழுவு ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தினமும் 1 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். இந்த அளவு தண்ணீருக்காக நாங்கள் ஊராட்சிக்கு வரி செலுத்தி வருகிறோம். பாலத்தொழுவு ஊராட்சி பகுதி என்பது குடிநீர் திட்டத்தின் கடைக்கோடி பகுதி என்பதால் சில ஆண்டுகளாகவே நிர்ணயிக்கப்பட்ட அளவு தண்ணீர் எங்களுக்கு வழங்குவதில்லை. இதனால் ஊராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
உடனடி நடவடிக்கை
எனவே பாலத்தொழுவு ஊராட்சிக்கு வரும் நீரேற்ற தொட்டிக்கு எவ்வளவு தண்ணீர் வருகிறது என்பதை கணக்கீடு செய்ய மீட்டர் பொருத்துவதுடன், இனிமேல் தடையின்றி சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
காலை நேரத்தில் சுமார் 1 மணி நேரம் சாலை மறியல் நடைபெற்றதால் அந்த வழியே சென்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.