கள்ளக்குறிச்சி
காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
|ரங்கப்பனூரில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மூங்கில்துறைப்பட்டு,
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் ரங்கப்பனூரில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கிணறு, ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்டவைகளுக்கு குடிநீர் ஏற்றபயன்படுத்தப்பட்டு வந்த மின்மோட்டார், ஒயர், குழாய்கள் மற்றும் மின்சாதன பொருட்களை மர்மநபர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் அங்குள்ள சங்கராபுரம்- சேராப்பட்டு சாலையில் காலி குடங்களுடன் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் குடிநீர் கேட்டு அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நடவடிக்கை
இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், குர்ஷித்பாஷா மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், மின்சாதன பொருட்களை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக தொடர்ந்து ஒரு தரப்பை சேர்ந்த எங்களுக்கு வரும் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இதை தவிர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனை கேட்ட போலீசார், இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.