கோயம்புத்தூர்
பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
|சீரான குடிநீர் வினியோகம் செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்துக்கு அம்பராம்பாளையம் ஆழியாறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் சீரான குடிநீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். மேலும் இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் நேற்று ராமநாதபுரத்தில் பாலக்காடு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி தாலுகா போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் தரப்பில், பாலக்காடு ரோடு அகலப்படுத்திய பிறகு குடிநீர் சரிவர வருவதில்லை. தற்போது குடிநீர் வினியோகம் செய்து ஒரு மாதம் ஆகி விட்டது.
இதனால் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். சீரான குடிநீர் வினியோகம் செய்ய கோரி பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் வினியோகம் செய்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றனர். அதற்கு போலீசார் தரப்பில் கோரிக்கைகளை மனுவாக எழுதி சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் கொடுங்கள். மேலும் குடிநீர் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதன்பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். காலை 8.30 மணிக்கு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமப்பட்டனா. மேலும் கேரளாவிற்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சாலை மறியலால் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.