திருப்பத்தூர்
சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
|ஏலகிரி மலையில் சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஜோலார்பேட்டை
ஏலகிரி மலையில் சாலை வசதி ஏற்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குண்டும், குழியுமான சாலை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரிமலை ராயனேரி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இப்பகுதியில் பல வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் சாலை மற்றும் தரை பாலம் உடைந்து குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியூமாக காணப்படுகிறது.
அதுமட்டுமின்றி காலம் காலமாக கெட்டுக்காடு பகுதியில் வசித்து வந்த குடும்பங்களை சாகச சுற்றுலா தளம் அமைக்கப்படும் என்ற பெயரில் அப்புறப்படுத்த கூடாது. தங்கள் பகுதி மக்களுக்கு பஸ் நிறுத்தம் வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வைத்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அத்தனாவூரில் இருந்து நிலாவூர் செல்லும் சாலை அருகே ராயனேரி கூட்ரோடு பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏலகிரிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டம் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இருப்பினும் சமாதானம் ஆகாத மக்கள் துறை சார்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வர வேண்டும் என கூறினர்.
அதன்பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன் மற்றும் துணைத் தலைவர் திருமால், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில்குமார் ஆகியோர் வந்து அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.