< Back
தமிழக செய்திகள்
கல்வராயன்மலையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர், எம்எல்ஏ பங்கேற்பு
கள்ளக்குறிச்சி
தமிழக செய்திகள்

கல்வராயன்மலையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர், எம்எல்ஏ பங்கேற்பு

தினத்தந்தி
|
20 May 2023 12:15 AM IST

கல்வராயன்மலையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலெக்டர், எம்எல்ஏ கலந்து கொண்டனர்.

கச்சிராயப்பாளையம்,

கல்வராயன்மலையில் வருவாய்த்துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட திட்ட அலுவலர் செல்வராணி, கல்வராயன்மலை தாசில்தார் குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் கலந்து கொண்டு 517 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 87 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். மேலும் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான சுமார் 500 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

தொடர்ந்து கொடுந்துறை கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் சார்பில் 15-வது நிதிக்குழு திட்டத்தின்கீழ் ரூ.11 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாயையும், கரியாலூர் ஊராட்சி மாவடிப்பட்டு கிராமத்தில், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தையும் கலெக்டர் ஷ்ரவன்குமார், உதயசூரியன் எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் மக்களை தேடி மனுக்கள் பெறுதல் முகாமில் கொடுந்துறை கிராமத்தில் 266 மனுக்களும், மாவடிப்பட்டு கிராமத்தில் 218 மனுக்களும் பெறப்பட்டன. நிகழ்ச்சியில் கல்வராயன்மலை ஒன்றியக்குழு தலைவர் சந்திரன், கல்வராயன்மலை ஒன்றியக்குழு துணை தலைவர் பாச்சாபீ, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அலமேலு சின்னதம்பி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், சின்னதம்பி, ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம், சீனுவாசன், ஆன்டி, அண்ணாமலை, அர்ச்சனா, லட்சுமணன், செல்வராஜ் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்