திருச்சி
மின்தடையை கண்டித்து பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
|மின்தடையை கண்டித்து பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
சமயபுரம்:
அடிக்கடி மின்தடை
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியின் தலைநகரமாகவும், அதிக அளவில் அரிசி ஆலைகள் நிறைந்த நகரமாகவும் விளங்கி வருகிறது. இங்கு பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளிட்டவை உள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் மண்ணச்சநல்லூரில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்படுவதோடு, இரவில் தூக்கமின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இதையடுத்து மின் தடை ஏற்படுவதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மண்ணச்சநல்லூர் மின்வாரிய அலுவலகத்திற்கு பொதுமக்கள் பலமுறை தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
பஸ் சிறைபிடிப்பு
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை திருச்சி -துறையூர் சாலையில் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் அங்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, மின் தடையை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.