திருவண்ணாமலை
குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்து விவசாயிகளுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
|ஆரணி முள்ளண்டிரம் கிராமத்தில் கல்குவாரியால் விவசாயம் நிலம் பாதிக்கப்படுவதாக கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.
ஆரணி முள்ளண்டிரம் கிராமத்தில் கல்குவாரியால் விவசாய நிலம் பாதிக்கப்படுவதாக கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.
குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் கல்வி உதவித் தொகை, வங்கி கடனுதவி, முதியோர் உதவித் தொகை, வீட்டு மனைப்பட்டா, சாதிச் சான்று, வேலை வாய்ப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
அப்போது கூட்டரங்கின் முன்பு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கோரிக்கை மனு அளித்தனர். பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அவர் உத்தரவிட்டார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அவர் ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கல்வி ஊக்கத் தொகை
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் புருசோத்தமன் தலைமையிலான நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பிளஸ்-2 முடித்த லட்சக்கணக்கான மாணவர்கள் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு படிக்க பொருளாதார வசதியில்லாத நிலையில் மேல்படிப்பை தொடர முடியாத நிலையில் உள்ளனர். இவர்கள் தனியார் கல்லூரியில் மேல்படிப்பை தொடர ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.
பிளஸ் 2-க்கு வகுப்புக்கு மேலும் இடைநிற்றல் கல்வி ஊக்கத் தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
முன்னதாக அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு கல்வி ஊக்கத் தொகை வழங்குவது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கல்குவாரி
ஆரணி தாலுகா முள்ளண்டிரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
முள்ளண்டிரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியால் விவசாய நிலம் முற்றிலும் பாதிக்கப்படுகின்றது. கல்குவாரியில் பாறைகள் வெட்டி எடுக்கும் போது பாறையில் இருந்து அதிகளவில் தூசி ஏற்பட்டு தங்கள் கிராமமே மாசடைகின்றது.
இந்த மாசினால் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு அடிக்கடி ஏற்படுகின்றது. இதற்கு பலமுறை ஆட்சேபனை செய்து உள்ளோம்.
எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.