செங்கல்பட்டு
கூவத்தூர் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்
|கூவத்தூர் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கூவத்தூரில் இருந்து கானத்தூர் மற்றும் கொடை பட்டினம் கிராமத்திற்கான சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள். அந்த பகுதியில் இருந்து வேலைக்கு செல்பவர்கள் மற்றும் ஆஸ்பத்திரிக்கு செல்லும் கர்ப்பிணிகள், நோயாளிகள் என பலரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் சாலையை சீரமைக்காததால் நேற்று காலை அந்த பகுதி மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் திடீரென கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், லத்தூர் ஒன்றிய குழுதலைவர் சுப்புலட்சுமி பாபு, லத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி 10 நாட்களுக்குள் சாலையை சீரமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.
அதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.