கன்னியாகுமரி
சாலையை சீரமைக்கக்கோரி நூதன முறையில் பொதுமக்கள் எதிர்ப்பு
|சாலையை சீரமைக்கக்கோரி ஆஸ்பத்திரியில் இருப்பதை போன்று படுக்கை, குளுக்கோஸ் வசதியை ஏற்படுத்தி பொதுமக்கள் நூதன முறையில் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.
தக்கலை அருகே அழகியமண்டபத்தில் இருந்து மேக்காமண்டபம், வேர்க்கிளம்பி வழியாக திருவட்டார் செல்லும் சாலை உள்ளது. இதில் கடமலைக்குன்று பகுதியில் பள்ளம் ஏற்பட்டு சாலை படுமோசமாக காட்சி அளிக்கிறது.
தற்போது இந்த இடத்தில் குளம் போல் தண்ணீரும் தேங்கி நிற்கிறது. இதனை அறியாத வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அதாவது அவ்வப்போது அந்த பள்ளத்தில் வாகனம் சிக்கி விழுந்ததில் சிலர் காயமடைந்து சிகிச்சை பெறும் சம்பவமும் நடந்து வருகிறது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், போராட்டம் நடத்தியும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் பொதுமக்கள் தங்களுடைய அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் சாலையோரம் மினி ஆஸ்பத்திரி போன்று உருவாக்கியுள்ளனர்.
அதாவது சாலையில் மழை வெள்ளம் தேங்கிய பள்ளத்தின் அருகில் 2 படுக்கை வசதிகளுடன் குளுக்கோஸ் வைக்கப்பட்ட நிலையில் காட்சி அளிக்கிறது. இதனை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நேற்று வித்தியாசமாக பார்த்தபடி சென்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில், போராட்டம் நடத்தியும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மினி ஆஸ்பத்திரி மாதிரி போன்று பள்ளத்தின் அருகே சாலையோரம் அமைத்து நூதன முறையில் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளோம். இனிமேலாவது சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம். என்றனர்.