< Back
மாநில செய்திகள்
படப்பை அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

படப்பை அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

தினத்தந்தி
|
24 Jun 2023 2:16 PM IST

படப்பை அருகே டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் உள்ள ஆரம்பாக்கம் ராகவேந்திரா நகர் சுபஸ்ரீ நகர் குடியிருப்பு பகுதிக்கு அருகே டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இந்த கடையை அகற்றக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், மற்றும் பொதுமக்களிடம் மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்போது பெண்கள், இந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை. மது குடித்துவிட்டு வருபவர்கள் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பது, கத்தியை காட்டி மிரட்டி போதையில் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபடுவது, பெண்களை கேலி கிண்டல் செய்வது, போதையில் அருகிலுள்ள வீடுகளில் நுழைவது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் குடிமகன்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த டாஸ்மாக்கடையை திறக்க கூடாது. டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றுங்கள் என்று ஆவேசமாக பேசி தரையில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கு அதிகாரம் எங்களுக்கு இல்லை.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கடையை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் படப்பை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்