< Back
மாநில செய்திகள்
பூந்தமல்லி நகராட்சி கமிஷனரை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
மாநில செய்திகள்

பூந்தமல்லி நகராட்சி கமிஷனரை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
17 Dec 2022 3:33 AM IST

பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரி நகராட்சி கமிஷனரை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

மாண்டஸ் புயல் காரணமாக கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி பல பகுதிகளில் இன்னும் வடியாமல் உள்ளது.

இந்தநிலையில் 5-வது வார்டுக்கு உட்பட்ட பொன்னியம்மன் நகர், சி.ஆர்.எம். நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கியும், சாலையில் ஆறாகவும் ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றும்படி பூந்தமல்லி நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், 5-வது வார்டு கவுன்சிலர் வடிவேலுவுடன் சேர்ந்து பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகராட்சி கமிஷனர் அறை முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நகராட்சி கமிஷனர் நாராயணன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரை முற்றுகையிட்ட பொதுமக்கள், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம்

மேலும் தங்களின் பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும். இல்லை என்றால் இங்கிருந்து செல்ல மாட்டோம் எனவும் பொதுமக்கள் கூறினர். இதையடுத்து நகராட்சி கமிஷனர் நாராயணன், அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அந்த பகுதியில் அதிக அளவில் கழிவுநீர் தேங்கி இருப்பதை கண்டு அவரே அதிர்ச்சி அடைந்தார். மழைநீர் கால்வாய் அமைத்தும் இந்த பகுதியில் கழிவுநீர் செல்லாமல் குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி கமிஷனர் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்