பெரம்பலூர்
லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
|ஜல்லிக்கற்களால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்ததை அடுத்து லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக ஜல்லிக்கற்களை ஏற்றி செல்வதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
2 பேர் கீழே விழுந்தனர்
பெரம்பலூர் அருகே உள்ள எசனை மற்றும் ஆலங்கிழி பகுதியில் கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து லாரிகளில் அளவுக்கு அதிகமாகவும், பாதுகாப்பின்றி ஏற்றி செல்லப்படும் சிப்ஸ் ஜல்லிக்கற்கள் நேற்று இரவு சாலையில் வழிநெடுக கொட்டி கிடந்தன. நேற்று காலை அந்த சாலை வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து ஆத்திரமடைந்த எசனை, கீழக்கரை ஆகிய 2 கிராம மக்கள் ஆங்காங்கே சாலைகளில் கல்குவாரிகளில் இருந்து வந்த லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்களுக்கும், கல் குவாரிகள் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவலறிந்த வந்த பெரம்பலூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலைகளில் கொட்டி கிடக்கு ஜல்லிக்கற்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அளவுக்கு அதிகமாக ஜல்லிக்கற்களை ஏற்றி வரும் லாரிகள் குறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தால், அந்த லாரிகளை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு லாரிகளை விடுவித்தனர். இதையடுத்து போக்குவரத்து பாதிப்பை போலீசார் ஒழுங்குப்படுத்தினர். இந்த லாரிகளை சிறைப்பிடித்தது அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.