திருவள்ளூர்
தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
|மீஞ்சூர்,
மீஞ்சூர் அருகே நாலூர் ஊராட்சியில் நாலூர் கம்மவர்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நாலூர் ஏரிக்கரை அருகே ஒன்றிய சாலை செல்கிறது. இந்த சாலை அருகே தனியார் ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்திலிருந்து நாள்தோறும் ஏராளமான கன்டெய்னர் லாரிகள் அதிக பாரம் ஏற்றி வருவதால் நாலூர் கம்மார்பாளையம் சாலை சேதமடைந்து வருகிறது.
இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் நாலூர் கம்மார்பாளையம் கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நேற்று தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதாரகு, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தகவல் அறிந்து வந்த மீஞ்சூர் இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.