< Back
மாநில செய்திகள்
குடிநீர் கேட்டு கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் மறியல்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

குடிநீர் கேட்டு கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் மறியல்

தினத்தந்தி
|
5 Oct 2023 12:43 AM IST

குடிநீர் கேட்டு கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குடிநீர் தட்டுப்பாடு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலம் ஊராட்சியில் கிருஷ்ணாபுரம் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதி மக்களுக்கு அப்பகுதியில் உள்ள கிணற்றின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது கடும் வறட்சி நிலவுவதால் கிணற்றில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. மேலும் இப்பகுதி மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வினியோகிக்கப்பட்டு வந்த குடிநீரும் கடந்த 6 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இது பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை என்பதால் ஆத்திரம் அடைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கிருஷ்ணாபுரம் பஸ் நிறுத்தத்தில் நேற்று திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அதிகாரி மரியதாஸ், ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்பிரபு மற்றும் அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 4 நாட்களுக்கு ஒரு முறை டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தனர்.

இதனைதொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்.

மேலும் செய்திகள்