கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் போராட்டம்...!
|கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கடந்த 30-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை,
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கடந்த 30-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து விரைவு பேருந்துகள் உள்ளிட்ட அரசு பேருந்துகள் சேவை செயல்பட தொடங்கியது.
எழில்மிகு வடிவமைப்புடன் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் இருந்து நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய தென்மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சர்வீஸ் சாலை வழியாக பேருந்துகள் இயக்கப்படுவதால் சிரமம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் பேருந்துகள் செல்வதால் சர்வீஸ் சாலையை பயன்படுத்த முடியவில்லை என்றும் அரசு பேருந்துகள் செல்லும் சாலையில் பள்ளி பேருந்துகள் செல்லக்கூடாது என போக்குவரத்து போலீசார் திருப்பி அனுப்புவதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கூடுவாஞ்சேரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஜி.எஸ்.டி சாலை வழியாக பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.