< Back
மாநில செய்திகள்
ராதாபுரத்தில் பனங்கன்றுகள் அகற்றப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

ராதாபுரத்தில் பனங்கன்றுகள் அகற்றப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

தினத்தந்தி
|
26 Sept 2023 12:40 AM IST

சாலை பணிக்காக ராதாபுரத்தில் பனங்கன்றுகள் அகற்றப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் ஏரிக்கரை சாலையின் இருபுறத்திலும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களின் வனம் அறக்கட்டளை சார்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து பனை விதைகளை விதைத்தனர். தற்போது பனை விதைகள் முளைத்து நன்கு வளர்ந்து வந்தது. இந்த நிலையில் தார்சாலை அமைக்கும் பணிக்காக சாலையோரத்தில் இருந்த 200 பனங்கன்றுகளை பொக்லைன் எந்திரம் மூலம் திடீரென முன்னறிவிப்பு இன்றி அழித்ததாக தெரிகிறது.

தொடர்ந்து அங்கு புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த வனம் அறக்கட்டளையின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் பனங்கன்றுகள் அகற்றப்பட்டதை கண்டித்து அங்கிருந்த பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடவடிக்கை

அப்போது அவர்கள், அகற்றப்பட்ட பனங்கன்றுகளை சாலையில் போட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் வனம் அறக்கட்டளை நிறுவனர் குணசேகரன் தலைமையில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் பனங்கன்றுகளை அகற்றிய ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்