< Back
மாநில செய்திகள்
வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நூதன ஆர்ப்பாட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நூதன ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
24 May 2022 8:43 PM GMT

வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அய்யப்பன் நாயக்கன்பேட்டை தர்மசமுத்திரம் பகுதியில் செல்லக்கூடிய செங்கால் ஓடைக்கு அருகில் சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் ஓடையின் நீர்வழியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருப்பதாக கூறி, அப்பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்தவர்களுக்கு, வருவாய்த்துறை மூலம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஓடைக்கும், குடியிருப்புக்கும் சுமார் 500 மீட்டர் இடைவெளி உள்ளது. நீர்வழியை ஆக்கிரமித்து வீடு கட்டவில்லை. எனவே வீடுகளை இடிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள், அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஆனால் வீடுகளை காலி செய்யவில்லையென்றாலும், வீடுகளை இடிப்போம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நீர்வழி ஆக்கிரமிப்பு என்று கூறி வீடுகள் இடிக்கப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாற்று இடம் வழங்க வலியுறுத்தியும், அப்பகுதி மக்கள் தர்மசமுத்திரம் கிராமத்தில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினர். மேலும் கருப்புக் கொடியை கையில் ஏந்தியவாறு ஆடு, மாடு, கோழிகளுடன் நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடியிருக்கும் வீடுகளை இடிப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும், அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் அய்யப்பன்நாயக்கன்பேட்டை தி.மு.க. கிளை செயலாளர் ஜெயராமன், பா.ம.க. மாநில இளைஞரணி துணை செயலாளர் செந்தில், மாவட்ட செயலாளர் அறிவுசெல்வம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ராமநாதன் மற்றும் விவசாய சங்கம், பா.ம.க., ஆர்.எஸ்.பி. கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்