< Back
மாநில செய்திகள்
டி.சி.கண்டிகை ஊராட்சியில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

டி.சி.கண்டிகை ஊராட்சியில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

தினத்தந்தி
|
22 Jun 2023 4:14 PM IST

டி.சி.கண்டிகை ஊராட்சியில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் டி.சி.கண்டிகை ஊராட்சியில் அரசு புறம்போக்கு நிலத்தில் கல்குவாரியை குத்தகை எடுக்க அனுமதி வழங்கிட மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருத்தணி வருவாய் துறையினர் டி.சி.கண்டிகை ஊராட்சியில் குத்தகை அனுமதி கேட்டுள்ள இடத்தில் நில அளவீடு செய்யும் பணி கடந்த 9-ந் தேதி நடைபெற இருந்தது. ஆனால் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக நில அளவீடு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் டி.சி.கண்டிகை ஊராட்சியில் கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என மாவட்ட கலெக்டர், திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ ஆகியோருக்கு ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்கள் சார்பில் கடிதம் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று திருத்தணி வருவாய் துறையினர் கல்குவாரி அமைய உள்ள இடத்திற்கு அருகில் உள்ள பட்டா நிலங்களை நிள அளவீடு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.சி. கண்டிகையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பதாகைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்ததாவது:- டி.சி.கண்டிகை ஊராட்சிக்கு உட்பட்ட ருக்மணிபுரம் கிராமத்தில் செயல்பட்டு வந்த கல்குவாரி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகை காலம் முடிந்து கல்குவாரி மூடப்பட்டது. தற்போது அந்த இடத்தில் புதிய கல்குவாரி அமைக்க கனிமவளத்துறை மூலம் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கல்குவாரி அமைய உள்ள இடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் குடியிருப்புகள் உள்ளது. இந்த கல்குவாரியில் வெடி வைக்கும் போது ஏற்படும் அதிக சத்தத்தால் பொதுமக்கள், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே டி.சி.கண்டிகை கிராமத்தில் கல்குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது என தெரிவித்தனர். பொதுமக்கள் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்