திருவள்ளூர்
ஆரணியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - போலீசார் குவிப்பு
|ஆரணியில் குடியிருப்பு பகுதிக்குள் அமையவிருந்த செல்போன் கோபுரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி, சுப்பிரமணிய நகர் பகுதியில் சத்ய சாய்பாபா நகர் உள்ளது. இங்கு ஏராளமான வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் ஒன்று உள்ளது. அதன் அருகே மற்றொரு செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கியது. இதனால் இப்பகுதி மக்கள் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
ஏற்கனவே ஒரு கோபுரம் இருக்கும்போது இன்னொரு கோபுரம் அமைப்பது பல தீமைகளுக்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது. இவை வெளியிடும் கதிர்வீச்சு காரணமாக உடல் கட்டி, மலட்டு தன்மை உள்பட உடல்நலக் கோளாறுகள் உண்டாகும் என தெரிகிறது. செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என கோரி கடந்த மாதம் 25-ம் தேதி பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டு புகார் மனு அளித்தனர். இதனால் கோபுரம் அமையும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்தது. இதனை அறிந்த இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் நேற்று காலை பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நிலைமை கைமீறி செல்ல ஒப்பந்த தொழிலாளர்கள் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றனர். மேலும் ஆரணி பேரூராட்சி மன்றத்தலைவர் ராஜேஸ்வரி, செயல் அலுவலர், கவுன்சிலர்கள் ஆகியோர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்க போவதாக கூறி பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பதட்டமும், பரப்புமும் நிலவியது. அசம்பாவிதத்தை தவிர்க்க போலீசார் அங்கு குவிந்துள்ளனர்.