அரியலூர்
காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
|சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் மெயின் ரோட்டு தெரு மற்றும் அங்காளம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த 6 மாத காலமாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.