< Back
மாநில செய்திகள்
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல்
வேலூர்
மாநில செய்திகள்

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல்

தினத்தந்தி
|
9 Feb 2023 10:04 PM IST

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வேலூர் சேண்பாக்கம் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வேலூர் சேண்பாக்கம் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

செல்போன் டவர்

வேலூர் கன்சால்பேட்டை காந்திநகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

இப்பகுதியில் உள்ள ஆசிரியர் வீட்டின் மொட்டைமாடியில் அமைக்கப்பட்டிருந்த தனியார் நிறுவன செல்போன் டவரின் ஒப்பந்தகாலம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக முடிவடைந்தது.

இதையடுத்து தனியார் நிறுவனம் அதே பகுதியில் உள்ள காலி இடத்தில் செல்போன் டவர் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக செல்போன் டவர் அமைப்பதற்காக ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வந்தன.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் நிலத்தின் உரிமையாளரிடம் கேட்டதற்கு, அங்கு வீடு கட்ட உள்ளதாகவும், அதற்கான கட்டுமான பணிகளை தொடங்கியதாகவும் கூறி உள்ளார்.

இதற்கிடையே அந்த நிலத்தில் செல்போன் அமைப்பதற்கான பணிகள் நடைபெறுவதாக அப்பகுதியில் தகவல்கள் பரவின. இதற்கு அப்பகுதிமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் நிலத்தின் உரிமையாளர் செல்போன் டவர் அமைக்கும் பணியை கைவிடுவதாக கூறி உள்ளார்.

பொதுமக்கள் சாலை மறியல்

இந்த நிலையில் செல்போன் டவர் அமைக்கும் பணிக்காக தொழிலாளர்கள் இன்று வந்தனர்.

அதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சேண்பாக்கம் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்துறையினர் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசார், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அந்த பகுதியில் செல்போன் டவர் அமைக்கப்படாது என்று கூறினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதன்காரணமாக அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக செல்போன் டவர் கட்டுமான பணிகளை தொழிலாளர்கள் பாதியில் நிறுத்தி விட்டு சென்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்