< Back
மாநில செய்திகள்
ரிஷிவந்தியம் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

ரிஷிவந்தியம் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்

தினத்தந்தி
|
5 Oct 2023 6:45 PM GMT

ரிஷிவந்தியம் அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ரிஷிவந்தியம்

ஆக்கிரமிப்பு

ரிஷிவந்தியம் ஒன்றியம் பழைய சிறுவங்கூர் மதுரா சிங்காரப்பேட்டை கிராமத்தில் ரேஷன் கடையை ஒட்டி அரசுக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. இந்த காலி இடத்தில் அங்கன்வாடி மையம் அல்லது வேறு ஏதாவது அரசு அலுவலகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர். இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த தனிநபர் ஒருவர் தனது பட்டா இடத்துடன் அந்த காலி புறம்போக்கு இடத்தையும் சேர்த்து ஆக்கிரமித்து வீடு கட்டத்தொடங்கியதாக தெரிகிறது.

சாலை மறியல்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50-க்கும் மேற்பட்ட அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை 8 மணியளவில் கள்ளக்குறிச்சி-சங்கராபுரம் சாலை சிங்காரப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தியாகதுருகம் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா, ஊராட்சி மன்ற தலைவர் செல்லம்மா பால்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் மறியலை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்