பெரம்பலூர்
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
|ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
குறை தீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்துறை ஊராட்சி ஜல்லிக்கட்டு பேரவையின் கவுரவ தலைவர் தேவராஜ் மற்றும் அனைத்து சமுதாய பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டது.
அதில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை எங்கள் ஊரில் நீண்ட காலமாக தொடர்ந்து நடத்தி வந்தோம். பின்னர் இடையில் ஏற்பட்ட நிர்வாக பிரச்சினை காரணமாக ஜல்லிக்கட்டு நடத்தாமல் இருந்தோம். கடந்த 2021-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு வருகிற 25-ந்தேதி ஜல்லிக்கட்டு நடத்த நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம். அதன்படி எங்கள் ஊரில் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
தையல் தொழிலாளர்கள் மனு
தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் அச்சங்கத்தினர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ஆயத்த ஆடை விற்பனை மூலமாகவும் தையல் எந்திர விற்பனையிலும், தையல் பொருட்கள் அனைத்திலும் வரும் வரி சதவீதத்தில் நல வாரியத்திற்கு என்று 1 சதவீதம் நிதி ஒதுக்கிட வேண்டும். நல வாரியத்தில் போதிய இருப்பு இல்லாத காரணத்தினால் அரசு வழங்கும் ஓய்வூதியம், கல்வி உதவி தொகை, இயற்கை மரணம் ஆகியவற்றுக்கு விரைவில் நிதி ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
மொத்தம் 273 மனுக்கள்
கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 273 மனுக்களை கலெக்டர் பெற்றார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சரவணன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கணபதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து மனு கொடுக்க வருகிறார்கள். அதில் எழுத, படிக்க தெரியாத மக்களுக்கு இலவசமாக மனு எழுதி கொடுக்க முன்பு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது அவ்வாறு இல்லை.
மனு எழுதி கொடுக்க ரூ.5௦௦ பெற்றவரை கண்டித்த பொதுமக்கள்
இதனால் எழுத, படிக்க தெரியாத மக்கள் கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு சாலையோர மரத்தடியில் அமர்ந்து மனு எழுதி கொடுப்பவர்களிடம் மனு எழுதி பெறுகிறார்கள். அவர்கள் ஒரு மனு எழுதி கொடுக்க கட்டணமாக ரூ.30-ஐ பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கிறார்கள். பொதுவான பிரச்சினைகளை கூட அவர்கள் தனித்தனியாக மனு எழுதி கொடுத்து, அதற்கு கட்டணம் வசூலிப்பதாக தெரிகிறது. மேலும் மனு எழுதி கொடுப்பவர்களின் எண்ணிக்கை வாரத்திற்கு வாரம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த கணவரை இழந்த பெண், தனது கோரிக்கைகளை மனுவாக எழுத மனு எழுதி கொடுப்பவரை நாடினார். அவரும் கலெக்டருக்கு, முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு, சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு என்று 4 விதமாக மனுக்களை எழுதி அந்த பெண்ணிடம் கொடுத்து, அதற்கு கட்டணமாக ரூ.500 வசூலித்தார். இதுகுறித்து அந்த பெண் மனு கொடுக்க வந்த சக பொதுமக்களிடம் கூறி வருத்தப்பட்டார். இதையடுத்து பொதுமக்களில் சிலர் சென்று அந்த பெண்ணுக்கு மனு எழுதி கொடுக்க ரூ.500 வாங்கிய நபரை கண்டித்து, அவரிடம் இருந்து ரூ.300-ஐ திரும்ப பெற்று அந்த பெண்ணிடம் கொடுத்தனர். மேலும் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வரும் எழுத, படிக்க தெரியாத பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதி கொடுக்க மீண்டும் தன்னார்வலர்களை கலெக்டர் நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.