கடலூர்
வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில்பூர்வீகமாக வசிக்கும் எங்கள் இடத்தை அளவீடு செய்யக்கூடாதுகலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
|வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் பூர்வீகமாக வசிக்கும் எங்கள் இடத்தை அளவீடு செய்யக்கூடாது என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
குறிஞ்சிப்பாடி அருகே சித்திவளாகம் என்கிற மேட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று பா.ம.க. மாவட்ட செயலாளர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் கிராமத்தில் தெற்கு தெரு, அம்மன் கோவில் தெரு, நடுத்தெரு உள்ளடக்கிய பகுதிகளில் நாங்கள் 45 குடும்பத்தினர் பூர்வீகமாக வசித்து வருகிறோம். வள்ளலார் இங்கு வருவதற்கு முன்பு இருந்தே எங்கள் மூதாதையர்கள் வசித்தார்கள். நாங்கள் தற்போது வசித்து வரும் பகுதி புறம்போக்கு இடமோ, குட்டை புறம்போக்கு இடமோ கிடையாது. அனைவரும் பட்டா பெற்று வசித்து வரும் இடமாகும். ஆனால் நாங்கள் வசிக்கும் இடத்தை எங்களுக்கு தெரியாமல், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகிறார்கள். அரசியல்வாதிகள் சூழ்ச்சி காரணமாக எங்கள் இடத்தை எடுக்க முயற்சி நடக்கிறது. நாங்கள் வாழ்ந்து வரும் இடத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம். இடத்தை எடுத்தால் உயிரை விடுவதை தவிர வேறு வழியில்லை. ஆகவே 45 குடும்பங்களையும் இருக்கும் இடத்திலேயே வாழ வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.