பெரம்பலூர்
ஆலத்தூர் கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் மனு
|ஆலத்தூர் கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.
குறை தீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது ஆலத்தூர் கேட் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.
அதில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலத்தூர் கேட் பகுதியில் சாலையின் கீழ்புறம் சுமார் 500 குடும்பங்களும், மேல்புறம் 400 குடும்பங்களும் வசித்து வருகிறோம். நெடுஞ்சாலையில் கீழ்புறத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும், ரேஷன் கடையும் உள்ளது.
மேம்பாலம் அமைக்க வேண்டும்
மேல்புறத்தில் வேளாண்மை துறைக்கும், தோட்டக்கலைத்துறைக்கும் அலுவலகம், அங்கன்வாடி மையம் மற்றும் செட்டிகுளம் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இதனால் மக்கள் தேசிய நெடுஞ்சாலையை அடிக்கடி கடந்து செல்ல வேண்டியுள்ளது. அப்போது அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
எனவே தேசிய நெடுஞ்சாலையில் ஆலத்தூர் கேட் பஸ் நிறுத்தம் அருகே மேம்பாலம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கலெக்டர் வலியுறுத்த வேண்டும், என்று கூறியிருந்தனர்.
சாலை வசதி
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் தலைமையில், வயலூர் புதிய காலனியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், புதிய காலனியில் புதிதாக வடிகால் வசதியுடன் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வே்ணடும், என்று கூறியிருந்தனர். குன்னம் தாலுகா, கே.புதூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களில் சிலர் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கீழப்புலியூர் கிராம ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, கீழப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கக்கூடாது. வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
நரிக்குறவர் இன மக்கள் மனு
வேப்பந்தட்டை தாலுகா, எறையூர் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், 46 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு விவசாயம் செய்ய அரசு சார்பில் கொடுக்கப்பட்ட நிலத்திற்கு பட்டா கேட்டு நாங்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டும் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. தற்போது அந்த நிலத்தில் 80 ஏக்கர் மட்டும் எங்களுக்கு தருவதாகவும், மீதமுள்ளதை சிப்காட் தொழிற்சாலை தொடங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் கொடுப்பதாகவும் கேள்விப்பட்டோம். சிப்காட்டுக்கு நிலத்தை கொடுக்க வேண்டும் என்றால், எங்களை கொன்று, அந்த நிலத்தில் புதைத்து விட்டு, பின்னர் சிப்காட்டுக்கு நிலத்தை கொடுத்து உங்கள் கொள்கையை நிறைவேற்றி கொள்ளுங்கள். நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 120 குடும்பங்களுக்கு தலா 2 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி, அதற்கான பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். அவ்வாறு வழங்கவில்லை இல்லையென்றால் நரிக்குறவர் இன மக்கள் விஷம் குடித்து தங்களது உயிரை மாய்த்து கொள்வதாக தெரிவித்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகளை தொடர்பாக மொத்தம் 298 மனுக்கள் பெறப்பட்டன.