புதுக்கோட்டை
வாழைக்குறிச்சி, மல்லம்பட்டியில் பஸ் வசதி கோரி பொதுமக்கள் மனு
|வாழைக்குறிச்சி, மல்லம்பட்டியில் பஸ் வசதி கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் வாழைக்குறிச்சியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ''எங்கள் ஊரில் இருந்து பக்கத்தில் இருக்கும் நெய்வேலி கிராமத்தில் இருந்தும் சுமார் 30 மாணவ-மாணவிகள் 5 கிலோ மீட்டர் தொலைவில் குழிபிறை பள்ளிக்கு நடந்தும், சைக்கிளிலும் சென்று வருகின்றனர்.
இதனால் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. எனவே மாணவ-மாணவிகள் நலன் கருதி மாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணிக்குள் பஸ் வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும்'' என தெரிவித்திருந்தனர்.
பஸ் வசதி
குளத்தூர் தாலுகா மல்லம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ''எங்கள் ஊரில் பஸ் வசதி இல்லாத காரணத்தால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் வடக்குப்பட்டிக்கு 6 கிலோ மீட்டர் நடந்து செல்லும் அவலம் உள்ளது. இதேபோல் முதியவர்கள், பெண்கள் அவசர தேவைக்காக மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அவதி அடைகின்றனர். எங்கள் ஊரை சுற்றி 3 கிராமங்கள் உள்ளன. அங்கும் பஸ் வசதி இல்லை.
எனவே கீரனூர்-விராலிமலை இடையே இயக்கப்படும் கே 7 அரசு பஸ்சை வடக்குப்பட்டி வழியாக எங்கள் ஊருக்குள் மல்லம்பட்டிக்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறியிருந்தனர்.
உண்ணாவிரத போராட்டம்
கொடும்பாளூரை சேர்ந்த விவசாயி செல்வராஜ், சத்திர ஊரணியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பல முறை மனு அளித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று மனு கொடுக்க வந்த அவர் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகே தரையில் அமர்ந்து திடீரென உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை அழைத்து சென்று கலெக்டரிடம் மனு அளிக்க வைத்தனர்.
இலுப்பூர் அருகே குறிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் 100 நாள் வேலைத்திட்ட அட்டையில் முத்திரை வைத்துள்ளவர்களுக்கு மட்டும் அதிக நாள் வேலை, அரசு நலத்திட்டங்கள் கிடைக்கும் என ஊராட்சி செயலர் தெரிவிப்பதாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி, அது வதந்தி என எடுத்துக்கூறினர்.
இதேபோல் பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 350 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார். கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.