பெரம்பலூர்
வசிப்பதற்கு மாற்று இடம் வழங்கக்கோரி பொதுமக்கள் மனு
|வசிப்பதற்கு மாற்று இடம் வழங்கக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.
குறை தீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்துறை அருகே விஜயபுரம், திருவள்ளுவர் நகரை சேர்ந்த பொதுமக்கள் வந்து கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர்.
அதில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான எல்லையம்மன் கோவில் நிலத்தில் இந்து அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த 60 குடும்பத்தினர் சுமார் 100 ஆண்டு காலமாக வசித்து வருகிறோம். தற்போது இந்து சமய அறநிலையத்துறை இடத்தை காலி செய்யுமாறு கூறுகிறார்கள். எனவே எங்களுக்கு மாற்று இடம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.
பாதை வசதி
வெங்கலம் மேற்கு, வடபுறம் உள்ள விவசாயிகள் சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட மனுவில், கல்லாறு மற்றும் 4 ஓடைகளில் விவசாயிகள் சென்று வர பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், என்று கூறியிருந்தனர். பெரிய வடகரை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் கூட்டுறவு அங்காடிக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் 3 பேர் அந்த காலி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அங்காடி கட்டுமான பணிகளை மேற்கொள்ள விடாமல் இடையூறு செய்து வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
ஆக்கிரமிப்பு
அன்னமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் துணைத் தலைவர் குப்புசாமி கொடுத்த மனுவில், சங்கத்தில் கையாடல், மோசடி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் நடைபெற்ற சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம், அஜெண்டா அனுப்பாத செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். குன்னம் தாலுகா த.கீரனூரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், மழைநீர், காட்டாற்று நீர் செல்லும் பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைத்ததை அகற்றி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.
281 மனுக்கள்
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 281 மனுக்களை கலெக்டர் பெற்றார். மேலும் அவர் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை முன்னிட்டு, நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.