< Back
மாநில செய்திகள்
தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
கரூர்
மாநில செய்திகள்

தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

தினத்தந்தி
|
12 July 2023 12:19 AM IST

அரவக்குறிச்சி பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் வட்ட கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

எதிர்ப்பு

கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து அரவக்குறிச்சி பகுதிக்கு தவுட்டுப்பாளையம் முதல் அரவக்குறிச்சி வரை நெடுகிலும் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு அந்த குடிநீர் குழாய் மூலம் காவிரி ஆற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக எடுத்து செல்லப்படுகிறது. அரவக்குறிச்சி பகுதியில் மிகபெரிய அளவிலான கிணறு தோண்டப்பட்டு கான்கிரீட் கிணறு அமைக்கப்பட்டு இங்கிருந்து செல்லும் தண்ணீர் அந்த கிணற்றில் விடப்பட்டு அந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்டு அதன் பிறகு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட உள்ளது.

இந்த புதிய குடிநீர் வழங்கல் திட்டத்திற்கு தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் ராட்சத வட்ட ்கிணறு அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டுள்ளது. மின் மோட்டார் மூலம் தண்ணீரை இறைப்பதற்காக பம்புகள் அமைக்கும் பணி நேற்று காலை ஆரம்பிக்கப்பட்டது. இதனை கண்ட தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகம், வருவாய்த் துறையினர் தங்களுக்கு எந்தவித தகவலும், முன்னறிவிப்பும் கொடுக்கப்படவில்லை என கூறி, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் கிருஷ்ணன், உதவி பொறியாளர் சிவராஜ் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அப்போது பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊராட்சித்தலைவர் மதிவாணன் மற்றும் ஊராட்சி உறுப்பினர்களிடம் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த திட்டம் குறித்த முழு விவரமும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும் எனவும், இத்திட்டத்தால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் எடுத்துரைத்தனர். மேலும் விரைவில் இதுகுறித்து கருத்துகேட்பு கூட்டம் தவுட்டுப்பாளையத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும், குடிநீர் திட்டத்தின் திட்ட அறிக்கையை ஊராட்சி நிர்வாகத்திடம் கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தெரிவிக்கும்போது, தவுட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் காவிரி ஆற்று குடிநீர் தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள் இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மேல் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பிறகு உடன்பாடு ஏற்படவே பொதுமக்கள், சமூக அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்