விழுப்புரம்
தார் தொழிற்சாலைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
|ஏந்தூரில் தார் தொழிற்சாலைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
மரக்காணம் தாலுகா ஏந்தூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். எங்கள் ஊராட்சிக்குட்பட்ட அரியந்தாங்கல், மடவந்தாங்கல் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் சார்ந்த தொழிலையே முதன்மை தொழிலாக செய்து வருகிறோம். ஏந்தூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட எல்லையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கல்குவாரி தொடங்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் புதியதாக தார் கலக்கும் ஆலை மற்றும் புதிய கல் குவாரி அமைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் எங்களுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் வெளிநபர்களை வைத்துக்கொண்டு பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் என்ற பெயரில் கூட்டத்தை நடத்தியுள்ளனர். எனவே இக்கூட்டத்தை ரத்து செய்து பொதுமக்கள் முன்னிலையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம மக்களின் குடியிருப்புகள் மற்றும் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதால் மாவட்ட கலெக்டர் இதில் நேரடியாக தலையிட்டு விவசாயம் பாதிக்கப்படாதவாறும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாதவாறும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர் சி.பழனி, இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறினார்.