அரியலூர்
கழிவுநீர் உர தொழிற்சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
|ஆண்டிமடம் அருகே கழிவுநீர் உர தொழிற்சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கோவில் வாழ்க்கை ஊராட்சியில் உள்ள பெரியகுளம் ஏரி அருகே தமிழக அரசின் சார்பில், ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து கழிவுநீர் உர தொழிற்சாலை அமைக்கும் இடம் வருவாய் துறையினரால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த இடத்தினை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம் பார்வையிட நேற்று வந்தபோது அந்த கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கழிவுநீர் உர தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் ஏற்கனவே மனு கொடுத்துள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் மேற்கண்ட இடம் தொடர்பாக தான் மீண்டும் ஆய்வு செய்து மறுபரிசீலனை செய்வதாக தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதையடுத்து, ஆண்டிமடம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமரசம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.