< Back
மாநில செய்திகள்
வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
மாநில செய்திகள்

வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

தினத்தந்தி
|
20 Jun 2023 2:48 AM IST

வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தொிவித்தனா்

கோபியில் வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

13 வீடுகள்

கோபி நகராட்சிக்குட்பட்ட சக்தி நகரில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 13 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு நத்தம் புறம்போக்கு நிலத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா வழங்கினர். இதைத்தொடர்ந்து 13 குடும்பத்தினரும் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர், 13 வீடுகள் உள்ள இடம் தனக்கு சொந்தமான இடம் எனக்கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தனியாருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து வீடுகளை காலி செய்யக்கோரி அந்த பகுதியில் கடந்த ஜனவரி மாதம் தனியார் சார்பில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.

எதிர்ப்பு

இந்த நிலையில் அந்த பகுதியில் கட்டப்பட்ட வீடுகளை இடிக்க பொக்லைன் எந்திரத்துடன் தனியார் உறவினர்களுடன் சென்றார். இதையொட்டி அந்த பகுதியில் மின் இணைப்புகளை துண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த 13 குடும்பத்தினரும், வீடுகளை இடிக்க முயன்றவர்களுடன் எதிர்ப்பு தொிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி தாசில்தார் உத்தரமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து வீடுகளை இடிக்காமல் அந்த தனியார் அங்கிருந்து சென்றார். எனினும் 13 வீடுகளில் 11 வீடுகளில் மட்டும் தான் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மீதம் காலியாக இருந்த 2 வீடுகளும் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்