< Back
மாநில செய்திகள்
திருத்தங்கலில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
விருதுநகர்
மாநில செய்திகள்

திருத்தங்கலில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

தினத்தந்தி
|
28 Dec 2022 7:01 PM GMT

கருத்து கேட்பு கூட்டத்தில் திருத்தங்கலில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சிவகாசி,

கருத்து கேட்பு கூட்டத்தில் திருத்தங்கலில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ரெயில்வே மேம்பாலம்

சிவகாசி-விருதுநகர் ரோட்டில் திருத்தங்கல் நகரம் உள்ளது. தற்போது சிவகாசி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட இந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

பல்வேறு காரணங்களால் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படாமல் இருந்தது. சிவகாசி எம்.எல்.ஏ. அசோகனின் முயற்சியால் தற்போது ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் முதல்கட்ட பணிகள் தொடங்கி நடந்து வந்தது. இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு பாலம் அமைக்கப்படும் விதம் குறித்து வரைப்படம் தயாரிக்கப்பட்டது.

கருத்து கேட்பு

ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் இடத்தில் உள்ள கட்டிடங்கள் சிலவற்றை கையகப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்காக சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நேற்று காலை சிவகாசி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் 110 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 90 சதவீதம் பேர் திருத்தங்கல் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் வேண்டாம் என்றும், அங்கு மேம்பாலம் அமைத்தால் பொதுமக்கள், வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறினர். சிலர் ரெயில்வே மேம்பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிகாரிகள் அதிர்ச்சி

மேம்பாலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கூறியதை கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் மேம்பாலம் வேண்டாம் என்று எழுத்து பூர்வமாக கொடுத்த கடிதத்தை அதிகாரிகள் பெற்று கொண்டு மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர்.

சிவகாசி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் சுற்று வட்டசாலை அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. அந்த பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. அதனை விரைவுப்படுத்தினாலே சிவகாசி பகுதியில் தற்போது உள்ள வாகன நெரிசல் இருக்காது. ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் சிலர் அதிகாரிகளிடம் கருத்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்