திருவள்ளூர்
டி.சி.கண்டிகை ஊராட்சியில் கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - ஆர்.டி.ஓ. தலைமையில் நாளை பேச்சுவார்த்தை
|டி.சி.கண்டிகை ஊராட்சியில் கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் டி.சி.கண்டிகை ஊராட்சியில் அரசு புறம்போக்கு நிலத்தில் கல்குவாரியை குத்தகை எடுக்க அனுமதி வழங்கிட மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டி.சி.கண்டிகை ஊராட்சியில் கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என மாவட்ட கலெக்டர், திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ ஆகியோருக்கு ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்கள் சார்பில் கடிதம் அனுப்பியிருந்தனர். கல்குவாரி அமைய உள்ள இடத்தில் வருவாய்த் துறையினர் நில அளவீடு செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் இரண்டு முறை டி.சி. கண்டிகை பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கல்குவாரி அமைய உள்ள இடத்தில் எந்திரங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.சி. கண்டிகையை சேர்ந்த பொதுமக்கள் பணி நடைபெறும் இடத்திற்கு அருகில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற திருத்தணி தாசில்தார் மதன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நாளை (வெள்ளிக்கிழமை) வருவாய் ஆர்.டி.ஓ. தீபா தலைமையில் கல்குவாரி உரிமையாளருக்கும், டி.சி.கண்டிகை பொதுமக்களுக்கும் இடையே அமைதிப் பேச்சு வார்த்தை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடைபெறும் என தாசில்தார் அறிவித்தார். பேச்சுவார்த்தையின் போது பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம் என தாசில்தார் கூறியதை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.