திருவள்ளூர்
காக்களூரில் குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
|காக்களூரில் குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஆஞ்சநேயபுரம் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆஞ்சநேயபுரம் 11-வது தெருவில் காக்களூர் ஊராட்சி மன்றத்தின் எந்த வித அனுமதியும் பெறாமல் தனியார் செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியிருப்பு பகுதியின் மத்தியில் செல்போன் கோபுரம் அமைக்கப்படுவதால் கதிர்வீச்சினால் மக்கள் பாதிக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் உடனடியாக ெசல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்த கோரியும் பொதுமக்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிகாரிகளிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். கடந்த 2019-ம் ஆண்டு இதே இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்க வந்துள்ளனர். அப்போது பொதுமக்கள் இதேபோன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் 2021-ம் ஆண்டு செல்போன் கோபுரம் அமைக்க வந்ததால் அப்போதும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தள்ளனர். இதையடுத்து செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை கைவிட்டு அந்நிறுவனம் சென்றதாகவும் தற்போது மீண்டும் அதே இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்க வந்திருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.