< Back
மாநில செய்திகள்
காவிரி ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
திருச்சி
மாநில செய்திகள்

காவிரி ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

தினத்தந்தி
|
22 March 2023 2:20 AM IST

காவிரி ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜீயபுரம்:

கூட்டுக்குடிநீர் திட்டம்

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் இருந்து திருப்பராய்த்துறை, ஜீயபுரம், முத்தரசநல்லூர், கம்பரசம்பேட்டை போன்ற பகுதிகளில் ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம், மணிகண்டம் கூட்டுக் குடிநீர் திட்டம், பிராட்டியூர் கூட்டுக்குடிநீர் திட்டம், பொன்மலை கூட்டுக்குடிநீர் திட்டம், மணப்பாறை கூட்டுக் குடிநீர் திட்டம் போன்ற பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் காவிரி ஆற்றில் இருந்து தினமும் லட்சக்கணக்கான லிட்டர் அளவு தண்ணீர் குழாய் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது மேட்டூர் அணையில் தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டதால் குடிநீருக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. குறைந்த அளவு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முக்கொம்பு அருகில் உள்ள திண்டுக்கரை காவிரி ஆற்றுப்பகுதியில் நேற்று காலை மணிகண்டம் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு காவிரி குடிநீர் வழங்குவதற்காக ஆழ்குழாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

பொதுமக்கள் எதிர்ப்பு

இது பற்றி தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து ஆழ்குழாய் அமைக்க வந்தவர்களிடம், அங்கு ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆழ்குழாய் அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், முக்கொம்பு மேலணையில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் உள்ள திண்டுக்கரை காவிரி ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி முக்கொம்பு மேலணையும் பாதிக்கப்படும், என்றனர். இந்த சம்பவத்தால் நேற்று காலை அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்