< Back
மாநில செய்திகள்
பள்ளி வளாகத்தில் ஊராட்சி அலுவலகம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பள்ளி வளாகத்தில் ஊராட்சி அலுவலகம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு

தினத்தந்தி
|
22 Feb 2023 12:32 AM IST

பள்ளி வளாகத்தில் ஊராட்சி அலுவலகம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குன்னம்:

உண்ணாவிரத போராட்டம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தை அடுத்துள்ள புஜங்கராயநல்லூர் ஊராட்சி அருகே உள்ளது ஜமீன் பேரையூர் கிராமம். இந்த ஊரில் ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி மற்றும் தொடக்கப்பள்ளி ஆகியவற்றின் கட்டிடங்கள் அருகருகே உள்ளன. தற்போது புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட திட்டமிடப்பட்டு, அங்கு இயங்கி வந்த அலுவலக கட்டிடம் இடிக்கப்பட்டது. மேலும் புதிய கட்டிட கட்டுமான பணிகள் நேற்று தொடங்க இருந்தது.

இந்நிலையில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை பள்ளி விளையாட்டு மைதானத்தில் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த கிராம மக்கள் சிலர் அங்கு ஒன்று திரண்டு, பள்ளிக்கூட வளாகத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டக்கூடாது என்று கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்குமார் ஆகியோர் அங்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாங்கள் முறையாக மாவட்ட நிர்வாகத்தை அணுகியோ அல்லது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்தோ இந்த பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் என்று போலீசார் கூறினர். இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்