< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

தமிழக பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து

தினத்தந்தி
|
21 March 2023 1:33 AM IST

பட்ஜெட் குறித்து விருதுநகர் மாவட்ட வர்த்தகர்கள், பொதுமக்கள் கருத்துகள் தெரிவித்தனர்.

தமிழக பட்ெஜட்டை நேற்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து விருதுநகர் மாவட்ட வர்த்தகர்கள், பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

வரவேற்பு

இதயம்முத்து (விருதுநகர் வியாபார தொழில் துறை சங்க செயலாளர்):-

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.62 கோடியிலிருந்து ரூ.30 கோடியாக குறைக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மேலும் விருதுநகர், கள்ளக்குறிச்சி, வேலூர் உள்ளிட்ட 4 நகரங்களில் ரூ.410 கோடி மதிப்பீட்டில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விருதுநகரில் ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் ஜவுளி பூங்கா அமைக்கப்படுவதும் வரவேற்கத்தக்கதாகும். மருத்துவத்திற்கு ரூ. 18,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் நவீன சிகிச்சை அளிக்க வாய்ப்பு ஏற்படும். கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி மூலம் அரசு பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதி மேம்படுத்தப்பட்டால் தனியார் பள்ளிகளை தேடி போக வேண்டியது இல்லை.

ஜவுளி பூங்கா

பிரசன்னா (தொழில் முனைவோர், விருதுநகர்):-

நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த ஜவுளி பூங்கா அறிவிப்பு அதிகார பூர்வமாக வெளியாகி உள்ளது. இதன் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை போன்ற பெண் தொழில் முனைவோருக்கு இதன் மூலம் ஜவுளி பூங்காவில் தொழில் தொடங்கவும், அதன் மூலம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

மேலும் பெண்களின் எதிர்பார்ப்பான ரூ. ஆயிரம் உரிமைத்தொகை பற்றிய அறிவிப்பும் வரவேற்கத்தக்கதாகும்.

இளைஞர்களுக்கு மகிழ்ச்சி

பட்டதாரி இளைஞர் முத்துமணி:-

என்னை போன்ற இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக வெளி மாவட்டங்களையும், மாநிலங்களையும் தேடிப் போக வேண்டிய நிலையில் வேலை கிடைக்காத நிலையில் வேதனையோடு இருக்கும் நிலையில் உள்ளூரிலேயே மிகப்பெரிய அளவில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

அதிலும் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற அறிவிப்பு படித்த இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் மானாவாரி விவசாயத்தை நம்பி உள்ள மாவட்டத்தில் பொருளாதாரம் மேம்பாட்டு அடைய இந்த திட்டம் வழி வகுக்கும்.

ராஜபாளையத்தை சேர்ந்த மூக்கம்மாள்:- பட்ஜெட்டில் குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இருந்தாலும் தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் இ்ந்த தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிலத்தடி நீர்மட்டம்

கோவிலூர் விவசாயி கலைச்செல்வன்:- தமிழக அரசின் நிதி பட்ஜெட்டில் ரூ.800 கோடியில் கண்மாய்கள் பராமரிக்கவும், ஊருணி, குளம் புதுப்பிக்கவும் நிதி ஒதுக்கியதை வரவேற்கிறேன்.

இதன்மூலம் விவசாயிகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வுக்கு வழிவகுக்கும். இதனால் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் விவசாயம் செய்து விவசாயிகளின் வாழ்க்கை தரம் மேம்பாடு அடையும்.

ஊக்கத்தொகை

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ்:-

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. ஆயிரத்தில் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த தொகை ஓரளவிற்கு மட்டுமே பயனை கொடுக்கும். இதனால் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு வகையான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத சூழ்நிலையும் ஏற்படுகிறது. எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்கப்படும் ஊக்கத்தொகை சற்று உயர்த்தி கொடுத்தால் இன்னும் நாங்கள் பலன்பெறுவோம்.

தாயில்பட்டி பச்சையாபுரம் சத்யா:-

பட்ஜெட்டில் இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த என்னை போன்ற பெண்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

ஏனெனில் அவசர செலவு, மற்றும் சிறு, சிறு செலவிற்கும் என்னுடைய கணவரை எதிர்பார்க்காமல் இந்த தொகையை வைத்து சமாளித்துக் கொள்ள முடியும்.

இலவச வைபை

ராஜேஷ் (பட்டாசு தொழில் அதிபர்):- தொழில்நகரமான சிவகாசிக்கு வைகோ எம்.பி.யாக இருந்த போது தான் இணையதள வசதிகள் கொண்டுவரப்பட்டது. இந்த வசதிகளை கொண்டு இங்குள்ள பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில்கள் வளர்ச்சி அடைந்து வருகிறது.

இதேபோல் தற்போது தமிழக பட்ஜெட்டில் மதுரை உள்பட சில மாநகராட்சிகளில் இலவச வைபை வசதி செய்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் சிவகாசியையும் சேர்த்து அறிவித்து இருந்தால் தொழில் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும். சிவகாசி நகரில் முக்கிய இடங்களில் இலவச வைபை வசதியை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் வரவேற்கத்தக்கது. இதன் எல்லையை விருதுநகர் மாவட்டம் வரை நீட்டித்தால் இங்கிருந்து மதுரை மாவட்டத்துக்கு தினமும் செல்லும் அரசு மற்றும் தனியார் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

கொங்கன்குளத்தை சேர்ந்த ஸ்ரீபிரியா பொன்னு பாண்டியன்:-

பட்ெஜட்டில் பல்வேறு அறிவி்ப்புகள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் தமிழ்நாடு மேலும் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். அதிலும் குறிப்பாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெண்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இல்லத்தரசிகளுக்கு ஒரு சிறிய செலவுக்கு இந்த தொகை பெரிதும் உதவியாக இருக்கும். அதேபோல கண்மாய் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை வரவேற்கிறேன்.

மாவட்ட விவசாய சங்க தலைவர் கர்ணன்:-

தமிழக அரசு பட்ஜெட்டில் ஏரி மற்றும் குளங்களை தூர்வார நிதி ஒதுக்கியுள்ளது, இது மிகவும் வரவேற்கத்தக்கது.

ஆனால் இதில் ஊழல் நடைபெறாமல் இத்திட்டங்களை முறையாக செயல்படுத்த வேண்டும். ஏற்கனவே தூர்வாரிய குளங்களை தூர்வாராமல் தூர்வாரப்படாத குளங்களை, ஏரிகளை தூர்வார வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்