மாநில கல்வி கொள்கையை உருவாக்கிட பொதுமக்கள் ஆலோசனைகளை அளிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு
|மாநில கல்வி கொள்கையை உருவாக்கிட பொதுமக்கள், கல்வியாளர்கள் கருத்துகள், ஆலோசனைகளை அளிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:
மாநில கல்வி கொள்கையை உருவாக்கிட பொதுமக்கள், கல்வியாளர்கள் கருத்துகள், ஆலோசனைகளை அளிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மாநிலத்திற்கென தனித்துவமான மாநில கல்விக்கொள்கையை வகுப்பதற்காக ஓய்வு பெற்ற புதுடெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் உயர்மட்டக்குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
தனித்துவமான மாநில கல்வி கொள்கையை உருவாக்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து தரப்பினரிடம் இருந்து கருத்துக்கள், ஆலோசனைகள் பெற்றிட உயர்மட்டக் குழுவால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பொதுமக்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தனியார் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோரிடம் இருந்து கருத்துருக்கள் மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
மேற்படி கருத்துருக்கள், ஆலோசனைகளை செப்டம்பர் 15-ந் தேதிக்குள் stateeducationpolicy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது சென்டர் பார் எக்செல்லன்ஸ் கட்டிடம், 3-வது தளம், களஞ்சியம் கட்டிடம் பின்புறம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 600025 என்ற அலுவலக முகவரிக்கோ அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.