இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
|இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளூயன்சா ஏ வைரசின் துணை வகையான இந்த வைரஸ், எச்3என்2 என அழைக்கப்படுகிறது. இந்த தொற்று பரவலை தடுக்க மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக மாநில அரசுகள் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலுக்கு தமிழ்நாட்டில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானாது மேலும் தமிழகத்தில் பிப்ரவரி மாத நிலவரப்படி 545 பேருக்கு இன்ஃபுளுயன்சா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் குறித்து சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கோவாவுக்கு சென்று திருச்சி திரும்பிய இளைஞர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்றும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இறப்பிற்கு காரணம், கொரோனாவா அல்லது இன்புளூயன்சா பாதிப்பு என ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். ஆய்வின் முடிவில் என்னவென்று தெரியவரும்.
இன்புளூயன்சா வரைஸ் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காகவே தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. சமுதாய & சமூக விழாக்களில் பெரிய அளவில் கூட்டம் கூடும்போது முகக்கவசம், தனிமனித இடைவெளி அவசியம். ப்ளு காய்ச்சலுக்கான தடுப்பூசிக்கு தற்போது அவசியம் இல்லை.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும். பொதுமக்கள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். சிறப்பு காய்ச்சல் முகாம் மூலம் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்ட 2,200 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.