சென்னை
தண்டையார்பேட்டையில் அனுமதி இன்றி பொதுக்கூட்டம்... அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது 10 பிரிவுகளில் போலீசார் வழக்கு
|தண்டையார்பேட்டையில் அனுமதி இன்றி பொதுக்கூட்டம் நடத்திய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது 10 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை தண்டையார்பேட்டை சேனி அம்மன் கோவில் தெரு இரட்டைக்குழி தெரு சந்திப்பில் வடசென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்த பொதுக்கூட்டம் நடத்த போலீசாரிடம் ஏற்கனவே அனுமதி கேட்டு இருந்தனர். ஆனால் போலீசார் அனுமதி வழங்கவில்லை என தெரிகிறது.
இந்தநிலையில் பொதுக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மற்றும் போலீசார் அனுமதி இன்றி எல்.இ.டி. திரைகள் வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பற்றி அவதூறாக ஒளிபரப்பியதாகவும், இந்த பொதுக்கூட்டத்தால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தி.மு.க. 42-வது வட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அ.தி.மு.க. வடக்கு, கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் மற்றும் ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் சீனிவாச பாலாஜி, வட்ட செயலாளர் அன்பு ஆகிய அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது சட்ட விரோதமாக கூடுதல், தீப்பற்றக்கூடிய பொருட்களை கவனக்குறைவாக கையாளுதல், மற்றவர்களின் உயிருக்கு அபாயம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுதல் என்பது உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.