திருவள்ளூர்
திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
|திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. அப்போது திருவள்ளூர், மணவாளநகர், ஈக்காடு, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், திருத்தணி, பூந்தமல்லி, செங்குன்றம் போன்ற சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் குடிநீர் வசதி, சாலை வசதி, வேலைவாய்ப்பு, கடன் உதவி என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 248 மனுக்களை அளித்தனர். அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார். அதை தொடர்ந்து கலெக்டர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை துவக்கி வைத்து மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அதைத்தொடர்ந்து கலெக்டர் சுய தொழில் புரியும் வகையில் மாற்றத்திறனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டின் வங்கி கடன் வாங்குவதற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, தனித்துணை கலெக்டர் மதுசூதனன், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது)காயத்ரி சுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.