திருவள்ளூர்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
|திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
குறைத்திருக்கும் நாள் கூட்டம்
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் பொதுமக்கள் குறைத்திருக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், செங்குன்றம் ஆகிய சுற்றுவட்டார பகுதியிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் நில பிரச்சனை, பசுமை வீடு, சாலை வசதி, குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு, கடன் உதவி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
நலதிட்ட உதவிகள்
அதைத்தொடர்ந்து கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக நல்ல முறையில் நிர்வகிக்கும் காப்பாளருக்கு மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்த 3 காப்பாளர்களுக்கு ரூ.10,000, ரூ.5,000, ரூ.3,000 என பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். தொழிலாளர் நலத்துறை சார்பாக பணி இடத்தில் விபத்தில் மரணம் அடைந்த 2 தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.10 லட்சத்திற்கான ஆணையை வழங்கினார். பின்னர் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பாக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில் கடனாக 2 பயனாளிகளுக்கு மானிய தொகையாக ரூ.2,45 ஆயிரத்து 725 காண காசோலைகளையும், ஒரு பயனாளிக்கு மானியத்தொகை ரூ.80 ஆயிரத்து 365 உள்பட ரூ.2 லட்சத்து 67 ஆயிரத்து 882 மதிப்பீட்டிலான பயணியர் ஆட்டோவையும் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான கூட்டம்
பின்னர் கலெக்டர் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டு அறிந்து மனுக்களை பெற்று கொண்டு அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன் பயிற்சி சப்-கலெக்டர் கேத்தரின் சரண்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குணசேகர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கலைச்செல்வி, கலால் உதவியாளர் பரமேஸ்வரி மற்றும் பள்ளித்துறை சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.