கடலூர்
கடலூரில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்: 20 பேருக்கு 3 சக்கர சைக்கிள் கலெக்டர் வழங்கினார்
|கடலூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 20 பேருக்கு 3 சக்கர சைக்கிள்களை கலெக்டர் வழங்கினார்.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் பட்டா தொடர்பாக 178 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்றுதல் தொடர்பாக 72 மனுக்களும், முதியோர் உதவித் தொகை கேட்டு 46 மனுக்களும், மகளிர் உரிமைத் தொகை கேட்டு 54 மனுக்களும், குழந்தைகள் கல்வி உதவித்தொகை கேட்டு 62 மனுக்களும், ஊரக வளர்ச்சித்துறை தொடர்பாக 56 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 29 மனுக்களும், தையல் எந்திரம் கேட்டு 45 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 60 மனுக்களும், மாற்றுத்திறனாளி நல அலுவலகம் தொடர்பாக 23 மனுக்களும், இதர மனுக்கள் 235 ஆக மொத்தம் 860 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற கலெக்டர் அவற்றை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும் விதிமுறைக்கு உட்பட்டு துரித நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 20 பேருக்கு தலா ரூ.9ஆயிரத்து 500 வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான 3 சக்கர சைக்கிள்களை கலெக்டர் வழங்கினார். அதைத்தொடர்ந்து குழந்தை திருமணங்கள் இல்லா தமிழ்நாடு என்பதை முன்னெடுக்கும் வகையில் குழந்தை திருமணம் தடுப்பு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ரமா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.