< Back
மாநில செய்திகள்
சுருக்குமடி வலையில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
கடலூர்
மாநில செய்திகள்

சுருக்குமடி வலையில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு

தினத்தந்தி
|
30 May 2023 2:12 AM IST

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என கலெக்டரிடம் சுருக்குவலை மீன்பிடி தொழிலாளர் ஒருங்கிணைப்பு குழுவினர் மனு அளித்துள்ளனர்.

குறைகேட்பு கூட்டம்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 400-க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மனுக்களை தீர ஆராய்ந்து உரிய விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அப்போது சுருக்குவலை மீன்பிடி தொழிலாளர் ஒருங்கிணைப்பு குழுவினர் கோரிக்கை மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எங்களுக்கு எந்தவித தீர்வும் தரப்படவில்லை. எனவே எங்களுடைய வல்லம் மற்றும் விசைப்படகுகளில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மீன்பிடி தடைக்காலம் முடிந்து தொழில் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அரசின் சலுகைகள்

இதேபோல் சிதம்பரம் அடுத்த மணலூர் லால்புரத்தில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், எங்களில் பலர் பட்டப்படிப்பு படித்துவிட்டு வாழ்வாதாரத்திற்காக பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அரசின் எந்தவொரு சலுகைகளும் எங்களுக்கு கிடைக்கப்பெறுவதில்லை. எங்களுக்கென்று வசிக்க தனியாக வீடு இல்லை. மேலும் எங்களை பார்த்தாலே போலீசார் அடித்து விரட்டுகின்றனர். அதனால் நாங்கள் வாழ்வதற்கு உணவு, உடை, உறைவிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க வேண்டும். மேலும் அரசின் சலுகைகள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்