< Back
மாநில செய்திகள்
வாரந்தோறும் நடைபெறும்    பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை    கலெக்டர் மோகன் எச்சரிக்கை
விழுப்புரம்
மாநில செய்திகள்

வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை கலெக்டர் மோகன் எச்சரிக்கை

தினத்தந்தி
|
22 Aug 2022 10:41 PM IST

வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை என்று கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.


விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். கூட்டத்துக்கு ஒருசில அதிகாரிகள் வருகை தராமல் இருந்தனர். இதையறிந்த கலெக்டர் மோகன், வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு அரசின் அனைத்துத்துறை அதிகாரிகளும் கட்டாயம் வர வேண்டும், அவ்வாறு வராத துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

அதனை தொடர்ந்து அவர், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் என்று பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 472 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். இம்மனுக்களை பெற்ற கலெக்டர் மோகன், இம்மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஆமூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையலராக பணியாற்றி வந்த அஞ்சலை கடந்த 17.10.2020 அன்று பணியின்போது உடல்நலக்குறைவால் மரணமடைந்ததையொட்டி கருணை அடிப்படையில் அவரது பெண் வாரிசுதாரரான மகள் பாஞ்சாலி என்பவருக்கு சத்துணவு மைய சமையலர் பணிக்கான நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நிலஎடுப்பு) சரஸ்வதி, மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரகுபதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரகுகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்